இரண்டு பிச்சைக்கார நண்பர்கள் அரண்மனை வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்து வந்தனர். அரசன் கோட்டையிலிருந்து வெளியே போகும்போதும் உள்ளே நுழையும் போதும் ஒரு பிச்சைக்காரன்
‘ மேன்மையான கடவுள் மன்னருக்கு அருள் செய்யட்டும் “ என்று கூறுவான். இரண்டாவது பிச்சைக்காரன் ‘ மேன்மை தாங்கிய மன்னர் வாழ்க’ என்று கூறுவான்.
கடவுளை உயர்வாகக் கருதும் முதல் பிச்சைக்காரனை அரசன் வெறுத்தான். அதே நேரம் தன்னை உயர்வாக போற்றிய இரண்டாவது பிச்சைக்காரனை மிகவும் பிடித்துப்போனது. கடவுளைவிட தானே பெரியவன் என்று மன்னன் எண்ணிக்கொண்டிருந்தான்.
ஒரு நாள் இரண்டாவது பிச்சைக்காரனுக்கு வெகுமதி அளிக்கவிரும்பினான். அதற்காக உணவுக்குள் ஒரு தங்கமோதிரத்தை வைத்து அவனிடம் கொடுக்கும்படி வேலையாளிடம் சொன்னாள். மோதிரத்தைப் பார்த்து அவன் மகிழ்ச்சியடையும் போது ‘ உனக்கு மன்னரின் பரிசு‘ என்று சொல்லும்படி அறிவுறுத்தி அனுப்பினான். இதனால் முதலாவது பிச்சைக்காரனௌம் தன்னைப் புகழ ஆரம்பிப்பான் என மன்னன் கருதினான். வேலையாள் இதை செய்துவிட்டு சற்று தள்ளி நின்று கவனித்தான்.
சிறிதளவு உணவை உண்டவுடன் இரண்டாவது பிச்சைக்காரன் ‘ எனக்கு வயிறு நிரம்பி விட்டது ‘ என்று கூறி மீதி உணவைத் தட்டுடன் முதலாமவனுக்குக் கொடுத்தான். அவன் வாங்கி சாப்பிட்டு முடிக்கும்போது மோதிரம் அவன் கையில் தட்டுப்பட்டது. அதை எடுத்துக்கொண்ட அவன் ‘ கடவுளின் கருணையே கருணை’ என்று பாராட்டினான். வேலையாள் நடந்ததை அரசனிடம் கூறினான். அரசனும் ‘ இவ்வுலகில் கடவுள் நினைப்பதே நடக்கும்’ என்பதை உணர்ந்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.