பூஜை விமர்சனம்


கோயிலுக்கு தானமாகக் கொடுத்த பூர்வீக நிலத்தை அபகரிக்க நினைக்கும் வில்லனிடமிருந்து தனியாளாக விஷால் மீட்பதே படத்தின் ஒன் லைன் .இந்த மொக்கை கதையை மட்டும் வைத்துக்கொண்டு  வழக்கமான கார் சேசிங், தாறுமாறாக காற்றைக் கிழிக்கும் அரிவாள், 100 அடி உயரத்தில் பறக்கும் சுமோ,கொஞ்சம்
குடும்ப செண்டிமெண்ட் என ஹரி படத்தின் அத்தனை சமாச்சாரங்களையும் கலந்து களமாடியிருக்கிரார்கள். ஆனால் திரும்பத் திரும்பப் பார்த்து சலித்துப்போன காட்சிகளால் நமக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகிறது. ஹரி படத்தில், ஹீரோவும் வில்லனும் மாறிமாறி கத்தி நமக்கு எரிச்சலை  ஏற்படுத்தினாலும் அதையெல்லாம் மறக்கும்படி நெகிழ்ச்சியான செண்டிமெண்ட் சீன்  இடையில் செருகியிருப்பார்.. அழகான குடும்ப அமைப்பை காட்சிப்படுத்துவார். ஆனால் இதில் காட்டுகிறாரே ஒரு குடும்பம்….! கொலைகார குடும்பம்..!.
பல வருடங்களாக மகனை ஒதுக்கி வைத்த தாய் திடீரென்று மகனை வரவழைத்து ‘வில்லனின்  கையை முறிச்சி வா’ என்கிறார். குழந்தைகளுக்கு சாவு பயத்தை காட்டிடாணுவ அவனுகளை கொன்னுடு என்று சுருதி உசுப்பேத்தி விடுகிறார். அவன் கையை முறிச்சிட்டு வந்ததுக்கு பதிலா அவன் கையை வெட்டிட்டு ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை என்று அத்தை ரேணுகா கதறுகிறார். இவ்வளவுக்கும் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரே ஆண் பிள்ளை… மூத்த பிள்ளை…விஷால்தான்.
இதையடுத்து வில்லனை விஷால்  அடித்து துவைத்ததை சின்ன வாண்டுகள் முதற் கொண்டு வீட்டுப் பெண்கள் வரை குடும்ப மானத்தைக் காப்பாற்றி விட்டதாக விஷாலை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் . படம் முழுக்க கூலிப்படை என்கிற வார்த்தை உச்சரிக்கப்படுகிறது. எல்லோரும் பிகாரிகள்  (அவர்கள் மேல் என்ன கோபமோ..). போதாக்குறைக்கு விசாலை அவர் குடும்பமே ஒரு கூலிப்படை போல்தான் நடத்துகிறது.
இந்தப் படத்தில் அற்புதமான தாய்-மகன் பாசப்பிணைப்பை வேறொரு கோணத்தில் அலசியிருக்கிறார் ஹரி.  தன் சொந்த பிள்ளையை உதவாக்கரை..உருப்படாதவன்.. தண்டச்சோறு .. இப்படி திட்டும் அப்பாக்களை மட்டும்தானே திரையில் பார்த்திருக்கிறீர்கள். இதில் அம்மாவை காண்பிக்கிறார் ஹரி.. இவ்வளவுக்கும் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் வீட்டில் எல்லோரையும் மதித்து நடக்கும் நல்ல பிள்ளையாகத்தான் விஷால் இருக்கிறார். அப்பாவும் கிடையாது. ராதிகாவுக்கு  ஒரே ரத்த சொந்தம் தன் மகன் விஷால் மட்டும்தான் . ஆனால் சூரியவம்சம் சக்திவேல் கவுண்டர் போல தன் மகனை எதற்காக ஆரம்பத்திலிந்து வெறுக்கிறார் என்பது புரியவில்லை. அதிலும் வீட்டை விட்டு விலக்கி வைக்கும் அளவுக்கு கல் நெஞ்சம் படைத்த தாய் இந்த உலகத்தில் எங்கு இருக்கிறார்…?
ஹரியின் செண்டிமெண்ட் பார்முலா சறுக்கியது இங்குதான். அதிலும் அம்மாவும் பிள்ளையும் சேரும் அந்தக் காட்சி இருக்கிறதே .. கண் கொள்ளாக்   காட்சி.. தமிழ்த்திரை சரித்திரத்தில் தளபதிக்கு அடுத்ததாக இந்த சீன் தான் பேசப்படும்.
படத்தில் பலவீனமே  அழுத்தமில்லாத காட்சியமைப்புகள் தான். விஷாலும் ஸ்ருதியும்  ஒருவருக்கொருவர் காதல் கொள்வது பிளாக் அண்ட் ஒயிட் காலத்து சினிமாவை விட கேவலமாக இருக்கிறது. அது ஏன் எல்கேஜி  படிக்கிற பொண்ணு பேச்சுப் போட்டியில் பேசுற மாதிரியே ஸ்ருதி பேசுது…?  பேசுவதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம்.ஆனால் கவர்ச்சி காட்ட முயல்வதுதான் மிகக் கொடுமை. கொளசல்யா கவர்ச்சி காட்டியதையே சகித்துக்கொண்ட இத்தமிழ் சமூகம் இதையும் சகித்துக் கொள்ளும் என் நம்புவோமாக…
சமீபத்தில் வெளிவந்த எந்த படத்தைப் பார்த்தாலும் அதில் சூரி கண்டிப்பாக இருக்கிறார். அவர் காமெடியனா அல்லது ஹீரோவின் தோழனா என்பதை டைட்டிலிலே போட்டு விடுவது நல்லது. பரோட்டா காமெடிக்குப் பிறகு சூரி நடித்த ஒரு காமெடியாவது நினைவுக்கு வருகிறதா..? இதில் சூரி, இமான் அண்ணாச்சி, பாண்டி கூட்டணியில் இவர்கள் அடிக்கும் லூட்டி தலைவலியின் உச்சம். ஒருவரையொருவர்  மாறி அடித்துக் கொள்கிறார்கள். கேட்டால் காமெடியாம். விஷால் -சூரி வரும் அநேக காட்சிகளில் சூரி விஷாலிடம் அடி வாங்குகிறார். அதுவும்  காமெடியாம். ஆண்டவா இந்த இமான் அண்ணாச்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த சூ(ர )ரி மொக்கையிலிருந்து  தமிழ் சினிமாவைக் காப்பாற்று.
காதலித்து ஓட முயன்ற ஸ்ருதியின் தோழியாக வரும் பெண்ணைப் பார்த்து தே..தே…தேவதைன்னு சொல்ல வந்தேன் என்பார் சூரி. அதாவது காதலித்து தான் விரும்பியவருடன் ஓடிப் போக நினைப்பவள் தே…? என்ன கொடுமை சார் இது..  இதெல்லாம் ஒரு காமெடியா..?
ஆனால் இதையெல்லாம் மிஞ்சுகிற ஒரு காமெடிக் காட்சி இருக்கிறது. ஸ்ருதியின் தோழி தன்  காதலருடன் ஓடிப்போவாள் . அவர்களை மறித்து விஷால் அட்வைஸ் செய்வார். நாலே டயலாக்தான். ஓடிப்போக எத்தனித்தவர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு பிரிந்துசென்றுவிடுவார்கள். இந்த அற்புதத்தை திரையில் கண்டுகளியுங்கள்.
தேவதை பாடல் மட்டும் பரவாயில்லை. வழக்கம்  போல ஹரியின் இந்தப் படத்திலும் பின்னணி இசையை, கார் கிரீச்சிட்டு பறக்கும் சத்தமும் உலோகங்கள் ஒன்றோடு ஓன்று மோதும் சத்தமும் , பன்ச் டயலாக்கும் மொத்தமாக விழுங்கி விடுகிறது. ஹரி படத்தில் பிரேமுக்கு ஒரு வில்லன் என புதிது புதிதாக முளைப்பார்கள். அத்தனை போரையும் ஹீரோ ஓய்வில்லாமல் புரட்டி எடுப்பார்.நல்லவேளை இதில் ஒரே வில்லன்தான்(முகேஷ் திவாரி) . அதற்காக படம் முழுதும் அவர்  ஒருவரையே அடித்து துவைத்தெடுப்பது பாவமாக இல்லையா..?
அதுசரி.. இந்தப் படத்தில் சத்யராஜ் எதற்கு…?  காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகும் போது அமர்க்களமாக  இருக்கிறது. அத்தோடு காணாமல் போகிறார். கடைசியில் வருகிறார். விசாலை அடிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார். இறுதியில் வில்லனை விஷால் கொன்றுவிட, கடமை தவறாத காவல்துறை அதிகாரியான அவர் தன் துப்பாக்கியால் ஏற்கனவே இறந்த வில்லனை சுட்டுவிட்டு ஹீரோவை தப்பிக்க விடுகிறார்.(யோவ் இத இன்னும் எத்தனை படத்திலய்யா காண்பிப்பீங்க..)
இன்னொரு தாமிரபரணியாக இருக்கும் என்று நினைத்து போனால் இன்னொரு தோரணையாக..ம்ஹும் ..அந்த அளவுக்கு  கூட இல்லை

கருத்துகள்