'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!

Real Beauty does not depend on Colour - Beauty Care and Tips in Tamil
இயற்கையின் படைப்பில் அனைவரும் அழகுதான். அழகு என்பது நிறத்தால் தோற்றத்தால், வருவது அல்ல. உள்ளத்தின் தூய்மையே, அன்பே முகத்தில் அழகை, அமைதியை வெளிப்படுத்தும்.

அதற்காக தோற்றத்தை சீர்கேடாக வைத்துக் கொள்ளலாமா என்று கேட்கவேண்டாம்... ஒவ்வொருவரும் தன் மேனியை பேணிக்காத்து நோயின்றி என்றும் இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே அழகு.
அனைவரும் தன் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்ளவே விரும்புவர். அதிலும் இளம் பருவத்தினருக்கு தன்னை அழகு படுத்திக்கொள்வதில் நாட்டம் அதிகம் இருக்கும்.
அதற்காக பல ரசாயனம் கலந்த கிரீம்களைத் தடவி தன்னை அழகுபடுத்திக் கொள்வர். இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும். முகத்தில் சொறி, கருப்புத் திட்டு, முகச் சுருக்கம், கண்களில் கருவளையம், முகப்பரு, தேமல் என பலவகையான பாதிப்புகள் ஏற்படும். 
சிலருக்கு பலஹீனத்தாலும், ஈரல், இருதயம், குடல் பாதிப்புகளாலும் இம்மாதிரியான அலர்ஜி உருவாகலாம். முகத்தின் சருமம் மிகவும் மென்மையானது.  அதனாலேயே எந்த ஒரு நோயும் முதலில் முகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மனிதனின் அகத்தை மட்டுமல்ல, நோயையும்கூட முகத்தில் பார்த்து விடலாம்.
இப்படி வெளிப்புறத்தாலும், உட்புறத்தாலும் ஏற்படும் பாதிப்பால் உண்டான தோல் அலர்ஜி நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் இருவகையான மருந்துகளைக் கொடுப்பார்கள்.
ஒன்று மேற்பூச்சு மருந்துகள், மற்றொன்று உட்கொள்ளும் மருந்துகள். 
அப்படி மருந்துகளைச் சாப்பிடும்போதோ அல்லது பூசும்போதோ பாதிக்கப்பட்ட உறுப்புகள் குணமாகும். தோலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
மங்கு:
சிலருக்கு மூக்கின் மேல் பகுதியில் மச்சம் போல் கருப்பாக படர்ந்து காணப்படும். இதனை மங்கு என்பார்கள். முகத்தில் மங்கு வர முக்கியக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் முரண்பாடாகும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளதால் அவை உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளை பாதிக்கின்றன. இதனால் மங்கு முகத்தில் தெரிகிறது.
மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளால்கூட ஹார்மோன்கள் பாதிப்படையும். குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் மூக்கில் மங்கு உண்டாகும். இந்த மங்கு தோன்றினால் முக அழகு மாறிவிடும். இதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் சோர்ந்து விடுவார்கள். இப்பிரச்சினை தீர இதோ ஒரு எளிமையான மருத்துவ முறை...
கோக்டம் - 10 கிராம் எடுத்து நார்த்தம் பழச் சாறில் ஊறவைத்து அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து உலர்ந்தபின் முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் மங்கு மறையும். (குறிப்பு - முகத்தில் தடவும்போது மங்கு ஏற்பட்ட பகுதியில் அழுத்தமாகத் தடவக் கூடாது)
சருமம் பளபளக்க:
பச்சைப் பயறு -  250 கிராம்

மஞ்சள் -  100 கிராம்
வசம்பு -  10 கிராம்

எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும்.
அழகைத் தக்க வைக்க:
* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்­ணீராவது அருந்த வேண்டும். 
* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
* மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.
* கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.

கருத்துகள்