முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
விஜய்-மோகன்லால் என பெரிய ஸ்டார் காம்பினேசனுடன், நீண்டநாளைக்குப் பிறகு ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் இன்று வெளியாகும் படம். அஜித்-விஜய் படங்கள் நேரடியாக மோதுவதால் களை கட்டுகிறது இந்த பொங்கல். இப்போ ஜில்லா எப்படின்னு பார்ப்போம், வாருங்கள்.
ஒரு ஊர்ல..:
தாதா மோகன்லாலில் அடியாள் மகன் விஜய். தனக்காக உயிரைக் கொடுத்த அடியாளின் பிள்ளையை தன் பிள்ளையாகவே வளர்க்கிறார். மோகன்லாலை யார் எதிர்த்தாலும் காலி பண்ணும் பாசக்காரப்பிள்ளையாக உருவெடுக்கிறார் விஜய். தனது தாதாயிசம் பிரச்சினையின்றித் தொடர, போலீஸில் நம் ஆள் இருவன் இருந்தால் நல்லதே என்று மோகன்லால் விஜய்யை போலீஸ் ஆக்குகிறார். போலீஸ் ஆன பிறகே, அப்பாவின் செயல்பாடுகளால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவது விஜய்க்கு புரிகிறது. எனவே நல்ல போலீஸாக மனம் திருந்தி, மோகன்லாலையும் திருத்திக்காட்டுவேன் என்று சவால் விடுகிறார். ஜெயித்தாரா என்பதே படம்.
உரிச்சா....:
படத்தின் முதல்பாதி ஆக்சன்+ஜாலி என சரிசமமாக விறுவிறுப்பாகவே போகிறது. தன் அப்பாவைக் கொன்னது போலீஸ் என்பதால், விஜய்க்கு போலீஸ்/காக்கி என்றாலே பிடிப்பதில்லை. அதைவைத்து அவர் அடிக்கும் லூட்டிகள் அட்டகாசம். காஜலைப் பார்த்தவுடனேயே காதலில் விழுகிறார். பெண் கேட்டு அடியாள் பட்டாளத்துடன் போகும்போது தான் தெரிகிறது அவரும் போலீஸ் என. அந்த காட்சியும், அதைத் தொடரும் காஜல்+சூரி காட்சிகளும் செம ஜாலி. இன்னொரு பக்கம், பாசக்காரப்பிள்ளையாக விஜய், மோகன்லாலில் கட்டளைகளை அடிதடி-அதிரடியாக நிறைவேற்ற, ஆக்சனுக்கும் பஞ்சமில்லை.
படத்தில் ஒரே பிரச்சினை, படத்தின் நீளம் தான். விஜய் போலீஸ் ஆகி (ஸ்ட்ரெய்ட்டா அசிஸ்டெண்ட் கமிசனர் தான்!) பின்னர் மனம் திருந்தி மோகன்லாலிடம் சவால் விடும்போது இண்டர்வெல். அதற்கே ஒன்றரை மணிநேரம் ஆகிவிடுகிறது. அதன்பிறகு மோகன்லாலுக்கும் விஜய்க்கும் நடக்கும் பாசப்போராட்டம்+நீதிப்போராட்டத்திலேயே அடுத்து ஒரு மணிநேரம் போகிறது. மோகன்லால் திருந்த தடையாக இருப்பது அவரது ஈகோ தான். அதை அவரது வளர்ப்புப்பிள்ளை எப்படி மாற்றுகிறார் என்று படத்தை முடித்திருந்தாலே, நல்ல படமாகத்தான் இருந்திருக்கும்.
ஆனால் இரண்டரை மணிநேரம் படம் ஓடியபின், கூடவே இருந்த சம்பத் வில்லன் என்று தெரிகிறது. பிறகு சம்பத்திடம் இருந்து மோகன்லால்+குடும்பத்தைக் காப்பாற்ற விஜய் போராடுவது, அதில் தம்பியை இழப்பது, அந்த பழி விஜய் மீதே விழுவது என்று வழக்கமான விஜய் மசாலாவிற்குள் கடைசி அரைமணி நேர படம் சிக்கிவிடுகிறது. இழுவையான காட்சிகள் சுவாரஸ்யத்தைக் குறைக்கின்றன. அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மாஸ் ஹீரோவுக்கே உரிய ஆக்சன் காட்சிகள்+காமெடி+காதல் என ஜாலியான படம் என்றே சொல்லலாம்.
விஜய்:
விஜய் அறிமுகம் ஆகும் ஓப்பனிங் சீன், செம மாஸ். தியேட்டரே அதிர்கிறது. படத்திற்குப் படம் மனிதருக்கு வயது குறைந்துகொண்டே போகிறது. ஜாலியான ஆளாகவும், ஆக்ரோசமான ஆளாகவும் ஒரே நேரத்தில் ஸ்கோர் பண்ணுகிறார். ஆனால் சீரியஸான காட்சிகளில்கூட அவர் கொடுக்கும் சில எக்ஸ்பிரசன்கள், வசனம் பேசும் ஸ்டைல் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. ஆனால் சண்டைக்காட்சிகளிலும், பாடல்காட்சிகளிலும், காமெடியிலும் மனிதர் கலக்குகிறார். மோகன்லாலுக்கு மரியாதை கொடுத்து, அவர் பெயரை முதலில் போட்டதற்கே விஜய்யைப் பாராட்டலாம்.
மோகன்லால்:
படத்தின் தரத்தை உயர்த்துவதே மோகன்லாலில் பிரசன்ஸ் தான். அட்டகாசமான நடிப்பு. ஆரம்பத்தில் காட்டும் கம்பீரமாகட்டும், பிள்ளையே எதிர்ப்பதை நினைத்து கலங்குவதாகட்டும் லாலேட்டன் பின்னிப்பிடல் எடுக்கிறார். பாதிப்படத்திலேயே சோலியை முடித்துவிடுவார்களோ என்று நினைத்தால், இறுதிவரை வருகின்ற முக்கியமான கேரக்டர். இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். முதல் ஷோவிற்கு நிறைய மலையாளிகளும் வந்திருந்தார்கள். லாலேட்டன் பேசும் பஞ்ச் டயலாக்களுக்கு(ஆமா..அவரையும் கெடுத்துட்டாங்கய்யா) செம கைதட்டல்.
காஜல் அல்வா:
காக்கி ட்ரெஸ்ஸிலேயே வருவதாலோ என்னவோ, கொஞ்சம் டல்லாகத் தெரிகிறார் காஜல். ஆனால் பாடல் காட்சிகளில் ஃப்ரெஷ்ஷாக வருகிறார். பெரிதாக கதையில் முக்கியத்துவம் இல்லையென்றாலும், காமெடிக்காட்சியிலும் கலக்குகிறார். சூரியை சுடும் காட்சி நல்ல காமெடி. இவர் உசரமா இருக்காருங்கறது வாஸ்தவம் தான்..அதுக்காக தொப்புள்ல இருந்து 2 சாண் கீழே சேலை கட்டுறது தான் ஓவரா இருக்கு..எப்போ என்ன ஆகுமோன்னு நமக்கு பக்கு பக்குங்குது. அது பக்கா..ஜிவ்வா?..என்னமோ!
சூரி:
இப்போது தான் இவர் சரியான ஃபார்முக்கு வந்திருக்கிறார். இரண்டாம்கட்ட ஹீரோக்களுடனே நடித்தவருக்கு இதில் புரமோசன். கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாமே சிரிப்பு மழை தான். அறிமுகம் ஆகும் காட்சியிலேயே போலீஸ் ட்ரெஸ்ஸுடன் வந்து, விஜய்யிடம் சிக்கி சின்னாப்பின்னமாவதும், விஜய் என்.சி.சி.கேர்ள்க்கு சூரியை வைத்து கராத்தே கிளாஸ் எடுப்பதும் செம காமெடி.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- இழுவையான கடைசி அரைமணி நேரம்
- படத்தின் நீளம். மூணு மணி நேரமாய்யா படத்தை ஓட்டறது? கர்ணன் படமா எடுக்கிறீங்க, கமர்சியல் படம் தானே?
- லாஜிக் பத்தியெல்லாம் ரொம்ப அலட்டிக்காதது..கிளைமாக்ஸ்ல மினிஸ்டர் சம்பத்தையே கொன்னுட்டு ஸ்லோமோசன்ல கேசுவலா நடந்துபோறது, விஜய் அசிஸ்டென்ட் கமிசனர் ஆகுறது, சம்பத் மோகன்லாலை கொல்ல எத்தனையோ வழி இருந்தும் தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டதுன்னு நிறைய இடத்துல லாஜிக்கே இல்லை. அட கமிசனர் கையை வெட்டுனா, ஒரு கேஸ்கூட போட மாட்டாங்களா? எஃப்.ஐ.ஆர் போட்டா, போலீஸ் ஆக முடியுமா? இப்படி நிறையக் கேட்கலாம்..ஆனால் இதெல்லாம் இருந்தாத்தானே, அது விஜய் படம்னு டைரக்டர் நினைச்சிட்டாரு போல.
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- மோகன்லாலில் நடிப்பு
- விஜய்யின் அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் காமெடி
- சூரியின் காமெடி
- அப்பாவுக்கும் பிள்ளைக்குமான போராட்டமாக கதையை அமைத்தது
- இமானின் சூப்பர்ஹிட் பாடல்கள் + பாடல் காட்சிகள்
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.